ஸ்தல வரலாறு
சனி தோஷம் நீங்க…
சனிதிசையும், ஏழரைசனியும் வந்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்கள் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து.
ஆனால் இராமா, இராமா என்று கூறினால் சனீஸ்வரன் இறங்கி வந்து துன்பங்களைக் குறைத்து விடுவான் என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று இராமாயணத்தில் நடந்தது.
ஸ்ரீ இராமருக்கும், இராவணனுக்கும் போர் நடந்த சமயம் இலட்சுமணன் மயங்கி விட்டார். அப்போது இலட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற தேவையான மூலிகை சஞ்சீவி மலையில் இருப்பதாக ஜாம்பவான் கூறினார். அங்கிருந்த அனுமன் ஸ்ரீ இராமரிடம் நான் சென்று மூலிகைகளை கொண்டு வருகிறேன் என்று கூறினார்.
ஸ்ரீ இராமரும் அனுமனை வாழ்த்தி வெற்றி உண்டாகட்டும்.கடும் இக்கட்டான சூழலில் என்னை நினைத்துக்கொள் என்றார், அனுமனும் மகிழ்ச்சியாக விடைபெற்று சஞ்சீவி மலையை நோக்கி புறப்பட்டார்.
இராவணன் தனது தவவலிமையால் நவக்கிரகங்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். இலட்சுமணனுக்கு தேவையான மூலிகைகளை அனுமன் எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது, அதை தடுத்து நிறுத்தும் சக்தி நவக்கிரகங்களுக்கு மட்டுமே உள்ளது. நவக்கிரகங்களில் சனிபகவான்தான் அதை செய்ய முடியும் என்று இராவணனுக்கு அறிவுறுத்தினார்கள்.
இராவணன் சனிபகவானை அழைத்து மூலிகையை எடுத்துச்செல்லாமல் அனுமனை தடுத்து நிறுத்துவது உன்னுடைய பொறுப்பு என்று கட்டளையிட்டான்.
தர்மத்தை மீறிய செயல் இது என்று தெரிந்திருந்தும் சனிபகவான் இராவணனின் கட்டளையை ஏற்று அனுமனை நாடிச்சென்றார். அனுமன் சஞ்சீவி மலையில் மூலிகையைத் தேடிக்கொண்டிருந்தார், நெடுநேரம் ஆகியும் மூலிகையை கண்டறிய இயலாததால் அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்தெடுத்தார், சஞ்சீவி மலையையே பெயர்த்து தன் ஒற்றை விரலில் நிறுத்தி இலட்சுமணனைக் காப்பாற்ற விரைந்து சென்ற அனுமனை வழியில் தடுத்தார் சனிபகவான்.
வீண் விவாதம் செய்யவோ உன்னிடம் போர் புரியவோ நான் இங்கு வரவில்லை. எனக்கு அதிக வேலையி ரு க்கிறது என்று அனுமன் சனிபகவானை எச்சரிக்கை செய்தார், ஆனால் அனுமன் என்ன கூறியும் கேளாமல் சனிபகவான் அனுமனை தடுக்கவே சனியை தன் காலால் அழுத்தினார் அனுமன், தாங்கமுடியாத வலியால் சனிபகவான் தம்மை விட்டுவிடும்படி அனுமனிடம் வேண்டினார்.
அனுமன் இராமபக்தனாயிற்றே அதனால் இராமா.. இராமா” என்று
சனிபகவான்
அழைத்தார், அனுமனின் பிடி சிறிது சிறிதாக தளர்ந்தது, இராம நாமத்தால் தப்பி பிழைத்தாய், உன்னால் பிடிக்கப்பட்டவர்கள் துன்புறும்போது இராம ஜெபம் செய்பவர்களைத் துன்புறுத்தக் கூடாது. என்று எச்சரித்து அதற்கு சனிபகவான் சம்மதம் தெரிவித்த பிறகே அவரை விடுவித்தார்.
ஆஞ்சநேயர் சனிபகவானை தன் காலால் அழுத்தும் திருக்கோலத்தை கொண்டிருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு சனிதிசை நடப்பவர்களும், சனிதோஷம் உள்ளவர்களும் ஏழரை சனியால் பிடிக்கப்பட்டவர்களும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து மீளலாம்.
ஸ்ரீ ராம ஜெய ராம, ஜெய ஜெய ராமா.
